அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக குடியேறும் மக்களை தடுக்கும் வகையில் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தேசிய அவசர நிலையை அதிபர் ட்ரம்ப் பிரகடனம் செய்தார். இதன் மூலம் எல்லை தடுப்புச் சுவர் மற்றும் அதனை ஒட்டிய கட்டுமான பணிகளும் மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், இந்த தடுப்புச் சுவரை கட்ட அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் ஒரு பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து, கட்டுமான பணிகளை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு தேவைப்படும் கூடுதல் 1.5 பில்லியன் டாலர் விரைவில் வழங்கப்படும் என்றும் பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது. செனட் பாதுகாப்பு கமிட்டியின் ஒப்புதல் இல்லாமல் நிதி ஒதுக்கிய பென்டகனிற்கு அமெரிக்க செனட்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.