கலிபோர்னியா மாகாணத்தின் போவெய் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலத்தில் (பாஸ்ஒவர்) Passover விடுமுறையின் இறுதி நாளான நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது, கையில் துப்பாக்கி உடன் வழிபாட்டு தலத்தில் நுழைந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் ஒரு பெண்மணி உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போவெய் மேயர் ஸ்டீவ் வாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலை நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது எனவும் கூறினார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், " துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் " என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.