இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், "ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு அமெரிக்கர்கூட மரணிக்கவில்லை. அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள நம் பாதுகாப்புப் படையினர் நலமாக உள்ளனர். நான் அமெரிக்க அதிபராய் இருக்கும்வரை, ஈரானை அணுஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டேன்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனக் கூறிய ட்ரம்ப், அந்நாட்டுடன் அமைதி காக்கவே அமெரிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்காவின் நிலைகளை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவுப் படைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈராக்கியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் உக்கிரமடைந்த அமெரிக்கா, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( ஜனவரி 3) வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. ட்ரம்ப்பின் நேரடி உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஈரான் அயலக மற்றும் உளவுப்பிரிவு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மிக முக்கியத் தளபதியும், அந்நாட்டு போர் நாயகனுமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான், சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிதீர்க்கும்விதமாக அமெரிக்க நிலைகள் மீது நேற்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், 80 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு ஈராக் உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியா ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க-ஈரான் இடையேயான இந்த மோதல் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மோதல் கைமீறிச் செல்வதற்குள் இருநாடுகளும் பொறுமைக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஈரான் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு?