நிலவில் முதல் நபராக கால் பதித்தவர் குறித்து அறியாதோர் இருக்க முடியாது. நீல் ஆம்ஸ்ட்ராங் கதையை தான் சிறு வயது முதல் படித்து வளர்ந்திருப்போம். அத்தகை வரலாற்று சாதனை படைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் சாதனை படைத்துள்ளார். அவர் தனது சக விஞ்ஞானிகளுடன் நிலவில் இருந்து பூமிக்கு திரும்பிய சமயத்தில், நியூயார்க் நகரில் இரு பக்கமும் மக்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். இச்சாதனைக்காக ஆம்ஸ்ட்ராங் பல்வேறு விருதுகளையும் பெற்றார்.
1962ஆம் ஆண்டில், ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி திட்டத்தில் நுழைந்தார். அவர் தனது குடும்பத்தினருடன் டெக்சாஸின் ஹூஸ்டனுக்கு குடிபெயர்ந்தார். அப்போது, ஆம்ஸ்ட்ராங் தனது முதல் ஜெமினி VIII க்கு கமாண்டராக பணியாற்றினார். இதையடுத்து, சக விண்வெளி வீரர் டேவிட் ஸ்காட்டும் இணைந்து மார்ச் 16, 1966 தேதி அன்று பூமியின் சுற்றுப்பாதையில் பறக்க தொடங்கினார். அப்போது, ஜெமினி ஏஜெனா இலக்கு வாகனத்துடன் தங்கள் விண்வெளி காப்ஸ்யூலை வெற்றிகரமாக இணைத்து சாதித்தனர். இரண்டு வாகனங்கள் விண்வெளியில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், இந்த சூழ்ச்சியின் போது, அவர்கள் சில சிக்கல்களைச் சந்தித்தனர். பணி தொடங்கிய கிட்டத்தட்ட 11 மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கினர். பின்னர் அவர்களை அமெரிக்க படையினர் பத்திரமாக மீட்டெடுத்தனர்.
நீல் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை பயணம் குறித்து பார்கையில், இவர் வயோலா லூயிஸ் ஏங்கல் - ஸ்டீபன் கொயினிக் ஆம்ஸ்ட்ராங் தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். நீல்லுக்கு 6 வயதில் தனது முதல் விமான பயணத்தை மேற்கொண்டார். அதிலிருந்து தான் விமானம் குறித்து ஆர்வம் அவருக்கு உருவாகியுள்ளது. பின்னர், தனது 16ஆவது பிறந்தநாளில் உரிமம் பெற்ற விமானியாகவும், 1947இல் கடற்படை விமான கேடட்டாகவும் பதவி வகித்தார். 1950இல் ஏற்பட்ட கொரிய போரின் காரணமாக பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோ சமயம், போரில் வெற்றிகரமாக செயல்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மூன்று பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதை தொடர்ந்து, கடின முயற்சியின் காரணமாக 1955ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த அவர், உடனடியாக ஏரோநாட்டிக்ஸ் தேசிய ஆலோசனைக் குழுவில் (NACA) இணைந்தார். பின்னர் நாசாவில் சிவில் ஆராய்ச்சி பைலட்டாக பணிபுரிந்தார். பல்வேறு விமானங்களை சோதனை செய்த அவர், ஆயிரம் மணி நேரம் வானில் சுற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் ஜனவரி 28, 1956இல் ஜேனட் ஷீரோனை மணந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 1971ஆம் ஆண்டு வரை நாசாவில் ஏரோநாட்டிக்ஸ் துணை இணை நிர்வாகியாக பணியாற்றிய நீல் ஆம்ஸ்ட்ராங், நாசாவை விட்டு வெளியேறிய பிறகு, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பேராசிரியராக பணியாற்றி வந்தார். ஆகஸ்ட் 2012இல் ஓஹியோவின் சின்சினாட்டியில் உள்ள மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 25, 2012 அன்று 82 வயதான ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
ஜூலை 20, 1969இல் இரவு 10:56 மணியளவில் பூமியிலிருந்து 2,40,000 மைல் தொலைவிலிருந்தபடி அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது, அவர் “இது மனிதனுக்கு ஒரு சிறிய படி, ஆனால், மனிதகுலத்திற்கு ஒரு பெரிய பாய்ச்சல்" எனத் தெரிவித்திருந்தார்.