2016 அமெரிக்க தேர்தலில் அதிபர் ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு ரஷ்யா உதவி செய்ததா என்பது குறித்து வழக்கறிஞர் ராபர்ட் முல்லர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், இதுகுறித்து 448 பக்க விசாரணை அறிக்கையை அமெரிக்க தலைமை வழக்கறிஞர் வில் பாரிடம் , ராபர்ட் முல்லர் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தலைமை வழக்கறிஞர் வில் பார், முல்லர் விசாரணையின் முடிவுகளை நான்கு பக்க அறிக்கையாக அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்.
அதில், அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையை தடுக்க அதிபர் ட்ரம்ப் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதிபர் ட்ரம்ப் நிரபராதி என முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஏற்காத ஜனநாயக கட்சியினர், முல்லர் அறிக்கையை முழுமையாக வெளியிடுமாறு தலைமை வழக்கறிஞர் வில் பாருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால், கடந்த மாதம், எடிட் செய்யப்பட்ட 448 பக்க முல்லர் அறிக்கையை முழுமையாக வெளியிட்ட தலைமை வழக்கறிஞர் வில் பார், "முல்லர் விசாரணையை தடுக்க அதிபர் ட்ரம்ப் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆனால் அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், முல்லர் விசாரணையை தடுக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், அதற்கு பல்வேறு முறை முயற்சி செய்ததாக கூறபட்டுள்ளது. இந்நிலையில், வில் பாரின் முடிவுகள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள விசாரணை அதிகாரி முல்லர், "தலைமையை வழக்கறிஞர் வில் பாரின் நான்கு பக்க அறிக்கை எனக்கு அதிருப்தி அளித்துள்ளது" என்றார்.