அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடவுள்ளனர்.
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளதால் இரு கட்சிகளும் தங்களது பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் பேசிய அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் அதிபரானால் அது நாட்டிற்கு அவமானம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
வடக்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ட்ரம்ப், "நீங்கள் எளிமையாக நினைவு கொள்ளுங்கள். பிடன் வென்றால், சீனா வென்றதாக அர்த்தம்.
உலக வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதாரத்தை நாம் உருவாக்கியுள்ளோம். ஆனால் இது சீன வைரஸ் (கரோனா வைரஸ்) காரணமாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது பொருளாதார நடவடிக்கைகளை நாம் மீண்டும் தொடங்கியுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை விமர்சித்து பேசத் தொடங்கிய அவர், "மக்களுக்கு அவரை (கமலா ஹாரிஸ்) பிடிக்காது. யாருக்கும் அவரைப் பிடிக்காது. அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இருக்க முடியாது. இது நம் நாட்டுக்கு பெரும் அவமானமாக இருக்கும்" என்று பேசினார்.
”ஜோ பிடன் அதிபரானால் அவரது கொள்கைகள் காரணமாக அமெரிக்கா வீழ்ச்சியடையும். இதன் காரணமாக பிடன் வெற்றிபெற வேண்டும் என்று சீனா விரும்புகிறது” என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புமருந்து சோதனையில் பின்னடைவு! தடுப்புமருந்து செலுத்தப்பட்டவரின் உடல்நிலை பாதிப்பு