அண்மையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் "நேம் தி ரோவர்" என்ற பெயரில் ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஒன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றிப் பெறுபவர் பரிந்துரைக்கும் பெயரை செவ்வாய் கிரகத்தில் இயங்கக்கூடிய வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோவர் விண்கலம் ஒன்றுக்கு சூட்டுவதாக அறிவித்திருந்தது.
இந்த போட்டியில் பங்கேற்கும் விதமாக அலபாமா மாகாணத்தை அடுத்துள்ள நார்த்போர்ட் எனுமிடத்தில் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவரும் மாணவி வனீரா ரூபானி தனது கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களில் இருந்தும் கே-12 பிரிவைச் சேர்ந்த சுமார் 28 ஆயிரம் போட்டியாளர்கள் தங்களது கட்டுரைகளை அனுப்பிவைத்துள்ளனர். இதில், ஏழாம் கிரேடைச் சேர்ந்த மாணவர் அலெக்சாண்டர் மாதரின் கட்டுரையின் அடிப்படையில் அதற்கு “ப்ரசிவெரன்ஸ்” என்று பெயரிடப்படும் என்று நாசா மார்ச் மாதம் அறிவித்தது.
இந்நிலையில், நேற்று ஒரு புதிய அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது. அதில், மாணவி ரூபானியின் புத்திக் கூர்மையைப் பாராட்டும் விதமாக வெளியான அந்த அறிவிப்பில் ரோவர் என்ற அந்த விண்கலத்தோடு செவ்வாய் பறக்கவுள்ள ஹெலிகாப்டருக்கு மாணவியின் எண்ணப்படி பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக நாசா மையம் வெளியிட்ட குறிப்பில், ‘கிரகங்களைத் தாண்டிய இந்த பயணத்தில் ஏற்படும் சவால்களை சமாளிக்க கடுமையாக உழைக்கும் வல்லுநர்களின் புத்திக் கூர்மை தான் விண்வெளி ஆராய்ச்சியின் அதிசயங்களை நாம் அனைவரும் அனுபவிக்க காரணம்’ என்று வனீரா ரூபானி எழுதிய அந்த வரிகள் எங்களை கவர்ந்தது என கூறியுள்ளது. அதன்படி, ஹெலிகாப்டருக்கு ‘இன்ஜெனுயிட்டி’என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரோவர் செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை சேகரிக்கும் அதே வேளையில், விமானமானது பறக்க முயற்சிக்கும். அது வெற்றிகரமாக இருந்தால், எதிர்கால செவ்வாய் கிரக பயணங்கள் அவற்றின் ஆய்வுகளுக்கு ஒரு வான்வழி பரிமாணத்தை சேர்க்க உதவும் என்று நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ப்ரசிவெரன்ஸ்‘ மற்றும் இன்ஜெனுயிட்டி ஆகிய இரண்டும் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த பகுதியானது, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு ஏரியின் அடித்தளமாகும்.
இதையும் படிங்க : கரோனாவால் அமேசான் லாபம் பெரும் சரிவு!