72-வது ஐநா பொதுக்கூட்டத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதர் சையத் அக்பருதின், "பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உலக சமுதாயமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றார்.
மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த மாநாட்டை ஒருங்கிணைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். ஐநா பொதுக்கூட்டத்தில் மீண்டும் அழைப்பு விடுப்பார்" என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், " செப் 23லிருந்து 25ஆம் தேதிவரை அதிபர் ட்ரம்ப் நியூர்க்கில் தான் இருப்பார். இந்த இடைபட்ட காலத்தில் அது நிச்சயம் நடைபெறும் " எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவுள்ள இருதரப்புப் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்னை இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சையத், " நட்பு நாடுகளுடன் என்னென்ன பிரச்னை குறித்து பேசவேண்டுமோ அவை அனைத்தும் ஆலோசிக்கப்படும்.
அதுதவிர, காந்தியடிகளின் 150வது பிறந்தாள் கொண்டாட்டத்தையொட்டி இந்தியா சார்பில் நடைபெறவுள்ள 'லீடர்ஷிப் மேட்டர்ஸ்' மாநாட்டில் உரையாற்ற வங்க தேச பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு எண்ணற்ற வாய்ப்புகள் அமையவுள்ளது"என்றார்.