அமெரிக்காவின் ஹூஸன்டன் நகரில் இன்று நடைபெறவுள்ள 'ஹவுடி மோடி!' என்னும் பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளார் என்ற வெளியான அறிவிப்பு, பாகிஸ்தான், சீன தூதரக வட்டங்களை கதிகலங்கவைத்துள்ளன.
நெருங்கிவரும் 2020 அதிபர் தேர்தலை கணக்கில்கொண்டுதான் அதிபர் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கூறுவது சரியல்ல. தென் சீனக்கடலில் பெருகிவரும் சீன ஆதிக்கத்தின் பின்னணியில்தான் 'ஹவுடி மோடி' பேரணி நடைபெறுகிறது.
சீன ஆதிக்கத்துக்கு எதிரான பேரணி
தென் சீனக்கடலில் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சீனாவின் லட்சியம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நலன்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. தென் சீனக்கடலில் பெரும் பகுதியை தன்னுடையது என சொந்தம் கொண்டாடும் சீனா, வியட்நாம், பிலிஃபைன்ஸ் உள்ளிட்ட சிறிய நாடுகளின் தீவுகளைக் கைப்பற்றியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இதன் காரணமாகவே, ஆசியா-பசிபிக்கிற்கு பதிலாக இந்தோ-பசிபிக் என்ற புதிய கருதாக்கத்தை அமெரிக்கா பாதுகாப்பு நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஆண்டுதோறும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, அமெரிக்க-சீன இடையே முழுநீள வர்த்தகப் போர் நிலவிவருகிறது. அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசார் சொத்துகளை சீனா கொள்ளையடித்து, பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்ப்பதாக அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, சீனாவில் இயங்கிவரும் ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்களை வேறு நாட்டிற்கு அல்லது எந்த நாட்டிற்கே திரும்பிவருமாறு ட்ரம்ப் வலியுறுத்திவருகிறார்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் கொள்கைகள், சீனாவுக்கு எதிராக எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா அளித்துவரும் ஆதரவு சீனாவுடனான கொள்கைகளை இந்தியா மாற்றியமைத்துள்ளது. "வர்த்தகப் போர் நேர்மறையான விளைவுகளை உண்டாக்கும் என்றால் அது நல்லதுதான்" என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத் கூறியிருப்பது, வர்த்தக உள்ளிட்ட பிரச்னைகளில் சீனாவுடனான இந்தியாவின் பரஸ்பர ஒத்துழைப்பு சுருங்கி வருவதையே வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தானைக் கைகழுவும் அமெரிக்கா
உலக அரசியல் அரங்கில் பாகிஸ்தான்-சீனா இரட்டை கதிர்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் சிறப்புத் தகுதி நீக்க விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஒன்று திரட்டும் முயற்சியில் பாகிஸ்தான் அதிதீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதில், சீனா, துருக்கியைத் தவிர வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் உதவி தேவையாகவுள்ளது. ஆனால், கடந்த வாரம் தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தபின், தலிபான்கள் மீது ராணுவ, தூதரக அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
மோடியின் ஹவுடி மோடி பேரணியில் கலந்துகொள்ளும் ட்ரம்பின் முடிவு, இந்தியா-அமெரிக்க உறவுகளில் பாகிஸ்தானுக்கு இடமில்லை என்பதைக் காட்டுகிறது.