அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவலர் ஒருவரால் சர்ச்சைக்குரிய விதத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்வத்தின் எதிரொலியாக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு காவல்துறை தவித்துவரும் நிலையில், தனது தடாலடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரத்தில் வழக்கம்போலவே சர்ச்சைக் கருத்துகளை பேசிவருகிறார். அண்மையில் அவர், போராட்டக்காரர்களை நாட்டின் ஆளுநர்களும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி, பாடம் புகட்ட வேண்டும் என்ற கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்.
இந்த விவகாரத்தில் அதிபரின் இதுபோன்ற கருத்துகளை கண்டிக்கும்விதமாக ஹூஸ்டன் நகரின் தலைமைக் காவலர் ஆர்ட் அசிவிடோ காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அசிவிடோ, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு இந்நாட்டின் காவல்துறை சார்பாக நான் தெரிவித்துக்கொள்வது இது மட்டுமே. உங்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசமுடியாத பட்சத்தில், வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பதே நலம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நீதி' - மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய லிவர்பூல் அணியினர்