அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். செப். 21 முதல் 27ஆம் தேதிவரை நீளும் இந்தப் பயணத்தின்போது ஐநா பொதுக்கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்கா பறக்கும் மோடியின் பயண அட்டவணை
'ஹவுடி ஹூஸ்டன்!'
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஞாயிறன்று (உள்ளூர் நேரப்படி) 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு தரையிறங்கினார்.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென் ஜஸ்டர் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பின்னர், இந்திய தேசியக் கொடிகளை அசைத்தவாறு விமான நிலையத்தில் காத்திருந்த அமெரிக்கா வாழ் இந்தியர்களை மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
"ஹவுடி ஹூஸ்டன்! இந்த உற்சாகமான நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்" என தன் ஹூஸ்டன் வருகை குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை
ஹூஸ்டனில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில், அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது உயர்மட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "இந்திய-அமெரிக்க நட்புறவைச் செறிவூட்டுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடனான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தத் துறையில் ஒத்துழைப்பை பன்மயப்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் முயல்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே ஆகியோர் உடனிருந்தனர்.
'ஹவுடி மோடி!' வரலாற்றுச் சிறப்புமிக்கது
பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கும் 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கவுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு அமெரிக்கா மண்ணில் இவ்வளவு கூட்டம் கூடுவது இதுவே முதல்முறையாகும்.
இதையும் படிங்க:
ஹவுடி மோடியிலுள்ள ஹவுடியின் அர்த்தம் என்ன?
ஹூஸ்டனின் என்.ஆர்.ஜி. கால்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் தேர்தலை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமருடன் சேர்ந்து உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.