அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றிபெற்று, அந்நாட்டின் 46ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும், அதிபர் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் ட்ரம்ப், இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. இழுபறி மாகாணங்களாக கருதப்படும் பென்சில்வேனியா, நெவாடா, மிச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா ஆகிய மாகாணங்களின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இருப்பினும், குடியரசு கட்சியின் பல்வேறு தலைவர்களும் ட்ரம்ப் தோல்வியடைந்துவிட்டதை தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டர். இதனால்தான், தேர்தல் முறைகேடு குறித்து ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுக்கவில்லை.
தேர்தலில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இரண்டு வாரங்களுக்குப் பின் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். அப்போது குடியரசு கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குடியரசு கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்பதை இது குறிக்கிறது.
மேலும், புதன்கிழமை வெளியிடப்பட்ட மோன்மவுத் பல்கலைக்கழக கருத்துக் கணிப்பில் 95 விழுக்காடு ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் நியாயமாக நடைபெற்றதாக நம்புகின்றனர். ஆனால், வெறும் 18 விழுக்காடு குடியரசுக் கட்சியினர் மட்டுமே தேர்தல் முடிவுகளை நம்புகின்றனர். சுமார் 70% குடியரசு கட்சியனர் தேர்தலில் மோசடி நடந்ததுள்ளதாக உறுதியாக நம்புகிறார்கள்.
அதிபர் ட்ரம்பிற்கு தற்போது வரையிலும் குடியரசு கட்சி வாக்காளர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளதால், இது குறித்து வெளிப்படையாக பேச அக்கட்சியின் தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
தேர்தல் தொர்பான அனைத்து சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு நேரம் அளிக்கலாம் என்று அக்கட்சியினர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் பைடன்!