சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கியது. இத்தொற்று தற்போது சீனாவில் குறைந்திருந்தாலும் 190-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக, இத்தொற்றால் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள்தான் கடும் பாதிப்படைந்துள்ளன.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் இத்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரண்டு லட்சத்தை எட்டியது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் புதிதாக 73 ஆயிரத்து 757 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 21 ஆயிரத்து 201ஆக அதிகரித்தது. அவர்களில் எட்டு லட்சத்து 78 ஆயிரத்து 923 பேர் இத்தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேசமயம், நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் 3,708 பேர் இத்தொற்றால் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஆறாயிரத்து 997ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரசால் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
அந்நாட்டில் இதுவரை ஒன்பது லட்சத்து 87 ஆயிரத்து 322 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 55 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் இத்தாலி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், ஃபிரான்ஸ் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இத்தாலியில், 26 ஆயிரத்து 644 பேரும், ஸ்பெயினில் 23 ஆயிரத்து 190 பேரும், ஃபிரான்சில் 22 ஆயிரத்து 856 பேரும், இங்கிலாந்தில் 20 ஆயிரத்து 732 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் நேற்று புதிதாக 11 பேருக்கு மட்டுமே இத்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால், சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 830ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 633ஆகவும் உள்ளது. மேலும் 77 ஆயிரத்து 474 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கிம் ஜாங் உன் நலமாக உள்ளார் - தென் கொரியா தகவல்