சீனாவின் வூஹான் நகரில், கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று படிப்படியாக பல நாடுகளிலும் வேகமாப் பரவியது. இத்தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய இத்தொற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்கியது. அதேபோல ஐரோப்பிய நாடுகளான இத்தாலியிலும், ஸ்பெயினிலும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் அதிதீவிரமான நிலையை எட்டியிருந்த கரோனா வைரஸ் தற்போது பெருமளவு குறைந்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 60,648 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,02,995ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 95,149 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 6,746 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,22,951ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,65,084ஆகவும் அதிகரித்துள்ளது. சீனாவில் நேற்று புதிதாக இரண்டு பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இத்தொற்றால் அந்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக எந்தவொரு உயிரிழப்புச் சம்பவங்களும் நிகழவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில், இத்தொற்றால் 82,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77,957 பேர் குணமடைந்த நிலையில், 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 295 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 884 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் நாட்டில் 52,952 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15,267 பேர் குணமடைந்த நிலையில், 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் அதிக பாதிப்புகளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
நாடுகள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் | குணமடைந்தவர்கள் |
அமெரிக்கா | 12,63,183 | 74,807 | 2,13,109 |
ஸ்பெயின் | 2,53,682 | 25,857 | 1,59,359 |
இத்தாலி | 2,14,457 | 29,684 | 93,245 |
பிரிட்டன் | 2,01,101 | 30,076 | அறிவிப்பு இல்லை |
பிரான்ஸ் | 1,74,191 | 25,809 | 53,972 |
இதையும் படிங்க: இத்தாலியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பு?