உலகின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடுகள் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அழிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படும் விகிதம் இரட்டிப்பாகியுள்ளதாகப் பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 248 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டதாகவும், இந்தாண்டு ஏப்ரல் மாதம் 405 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை முறைகேடாகக் காடுகள் அழிக்கப்படுவது 55 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவே பாதுகாப்புப் படையினர் காடுகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், முறைகேடாகக் காடுகள் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்தாண்டு பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவியேற்ற பின்னர் காடுகள் அழிக்கப்படுவது பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட ஜெய்ர் போல்சனாரோ, நாட்டை முன்னேற்ற அதிக விவசாய நிலங்களும் சுரங்கங்களும் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். இதனால்தான் அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாகப் பிரேசில் இருக்கிறது. அந்நாட்டில் இதுவரை கரோனாவால் 1,62,699 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!