அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் இருவரும் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, இரு அதிபர் வேட்பாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்தில், "இந்தியாவில் காற்றின் தரம் மோசமாக உள்ளது" என்று ட்ரம்ப் கூறியிருந்தார். அவரது இந்த விமர்சனம் இந்தியாவில் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், ஜோ பிடன் தனது ட்விட்டரில், "இந்தியாவில் காற்றின் தரம் இழிவாக உள்ளதாக அதிபர் ட்ரம்ப் கூறினார். நண்பரைப் பற்றி யாரும் இவ்வாறு பேச மாட்டார். காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை இவ்வாறு பேசுவதன் மூலம் நம்மால் தீர்க்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், "ஒபாமா காலத்தில் இரு நாடுகளுக்கிடையில் மிகச் சிறந்த உறவு இருந்தது. எனது காலத்தில் அது மீண்டும் உருவாகும். இயற்கையாகவே நாம் கூட்டணி நாடுகளாக இருக்கலாம்.
அமெரிக்காவும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் ஒன்றாக நிற்கும். சீனா உள்ளிட்ட வேறு எந்த நாடும் அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தாத வகையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஒன்றிணைந்து நாம் செயல்பட வேண்டும்.
மேலும், காலநிலை மாற்றம், சுகாதாரம், நாடுகடந்த பயங்கரவாதம் மற்றும் அணுஆயுத பெருக்கம் போன்ற பிற சர்வதேச சவால்களை ஒன்றாக எதிர்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களித்தார் அதிபர் ட்ரம்ப்