அமெரிக்கா அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன், பெர்னி சாண்டர்ஸ், மைக்கேல் ப்ளூம்பெர்க் ஆகியோரிடைய போட்டி நிலவியது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வுசெய்ய நேற்று பல்வேறு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் வெற்றிபெற்றார்.
இத்தேர்தலைப் பெரிதும் எதிர்பார்த்திருந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரும் முன்னாள் நியூயார்க் மேயருமான மைக்கேல் ப்ளூம்பெர்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இத்தேர்தலில் அவரால் நான்காம் இடமே பெற முடிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகவுள்ளதாக ப்ளூம்பெர்க் ஊடக நிறுவனர் மைக்கேல் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபர் ட்ரம்பை தோற்கடிக்க வேண்டும் என்றே ஒரே காரணத்திற்காக நான் மூன்று மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தேன்.
இப்போது அதே காரணத்திற்காக நான் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் இத்தேர்தல் பரப்புரைக்காக 500 மில்லியன் டாலர்கள் வரை செலவழித்துள்ளார்.