உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.03) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கு 90 விழுக்காடு வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் பத்திரிகையாளரும் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் தாய் மாமாவுமான பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பத்திரிகையாளரும் கல்வியாளருமான டாக்டர் பாலச்சந்திரனிடம் 2016 தேர்தல் கணக்கெடுப்புகள் பொய்த்துப் போனது குறித்து கேட்டதற்கு, ”2016ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் ஒரு பிறழ்வு ஏற்பட்டது” என வாதிட்டார். தென் டெல்லியில் உள்ள தனது வீட்டில் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மாவுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:
”ஓவல் அலுவலகத்தில் முதல் பெண்மணியாக ஹிலாரி கிளிண்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க மக்கள் நாட்டின் முதல் பெண் துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வி! துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய-அமெரிக்கர், ஆப்பிரிக்க-அமெரிக்கர் மற்றும் தெற்காசியப் பெண்மணி என கமலா ஹாரிஸ் தனது வாழ்க்கையில் ஏற்கனவே பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆனால் அதை விட மிகப்பெரிய சாதனை இன்னும் நடக்கவில்லை. பிடனுக்கு இந்தத் தேர்தலை வெல்ல 90 விழுக்காடு வாய்ப்பு உண்டு. பலருக்கு டிரம்ப்பை தெரியாது. அவர் பொதுசேவை என்று எதுவும் செய்யவில்லை. ஆனால் தொழிலாளர் வர்க்க வெள்ளையர்களுக்கு ஜனநாயகக் கட்சியினரின் கொள்கைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு சங்கடம் இருந்தது. மேலும், ட்ரம்ப் கோவிட்டை கையாண்ட விதம் அவருடைய மிகப்பெரிய தோல்வி.
கமலா ஹாரிஸின் சாதனைகள் குறித்து அவரது குடும்பம் பெருமிதம் கொண்டாலும் அவரது தாயின் நெருங்கிய ரத்த சொந்தங்களான நாங்கள் இப்போது வெவ்வேறு நாடுகளில் பரவியுள்ளதால் கொண்டாட்டத் திட்டங்கள் என்று எதுவும் இல்லை. எவ்வாறாயினும், சென்னையில் எங்களது பூர்விக கிராமத்தில் உள்ளூர்வாசிகளால் அவரது வெற்றிக்காக பிரார்த்தனை நடத்தப்படுகிறது” என்றார்.
பொதுவாழ்க்கையில் ஒரு நபராக கமலா ஹாரிஸின் பலத்தை நினைவு கூர்ந்த டாக்டர் பாலச்சந்திரன், அவரை திறமையான, நுண்ணறிவு மிக்கவர் என்று அழைக்கிறார். கலிஃபோர்னியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தது முதல், செனட்டராக இருப்பது உள்பட அவரது இருபது ஆண்டு கால வாழ்க்கையில் இந்த முன்னேற்றங்கள் நடந்துள்ளன என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
"சிவில் உரிமைகள், ஆப்பிரிக்க-அமெரிக்க இயக்கம் ஆகியவற்றில் அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார், ஏனென்றால் அவருடைய இரண்டு வயதில் என் சகோதரி அவரை அழைத்துச் சென்றபோதிலிருந்து அவர் அதைப் பார்த்துக்கொண்டு வருகிறார். அந்த நாள்களில் இந்தியர்கள் சிவில் உரிமைகள் இயக்கத்தில் இருந்தது என்பது மிகவும் அசாதாரணமானது” என்றார்.
அவர் தனது ஆப்பிரிக்க-அமெரிக்க சமூகத்தில் வளர்ந்துவிட்டார் என்றும் பாலச்சந்திரன் கமலா குறித்து நினைவு கூர்ந்தார். உள்நாட்டு சட்டத்தில் இருந்தும் அவர் நிறைய மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று அவர் மேலும் கூறினார்.
வாஷிங்டனில் உள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் பாலச்சந்திரனின் மகள் சாரதா பாலச்சந்திரன் ஒரிஹுவேலா, தற்போது தனது உறவினரும் வேட்பாளருமான கமலா ஹாரிஸுடன் கடைசிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
”ஜனநாயகக் கட்சியினரின் பாரம்பரிய ஆதரவாளர்களாக கருதப்படும் புலம்பெயர்ந்த மக்களிடையே ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?” என்று கேட்டதற்கு, ”டிரம்பும் மோடியும் நண்பர்கள் என நினைத்து அவர்களில் சிலர் டிரம்பின் பக்கம் மாறியிருக்கலாம். ஆனால் ஆசிய, இந்திய அமெரிக்கர்களில் 60-70 விழுக்காட்டினர், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இன்னும் ஜனநாயகக் கட்சியினர் தான்” என்றார்.
மேலும், தன் மருமகள் வெற்றிபெற தான் விரும்புவதாகவும், கமலா ஹாரிஸ் உலகின் பழமையான ஜனநாயகத்தின் முதல் பெண் துணை அதிபராக உருவெடுத்து வரலாற்றை உருவாக்குவார் என்றும் பாலச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருவேளை பிடன் வெற்றிபெற்றால் அது 2024ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் வசிக்கும் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆனால் அமெரிக்கா யாருக்கு வாக்களிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி! தீர்ப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!