அமெரிக்கா-சீனா இடையே ஓராண்டுக்கும் மேலாக வர்த்தகப் போர் நிலவிவருகிறது. இதனால் இருநாடுகளும் தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் (எதிர்த்தரப்பு) பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.
இதனிடையே, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் மீன் இறைச்சி, மருந்து, கால்நடைத் தீவனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் மீது வரிவிலக்கு அளிக்கப்படும் என சீனா நேற்று (புதன்கிழமை) அறிவித்தது. வர்த்தகப் போர் ஆரம்பித்து அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரி விலக்கு அளிப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், சுமார் ரூ. 178 லட்சம் கோடி மதிப்பிலான சீன பொருட்கள் மீது இம்மாதம் அமெரிக்கா விதிக்கவிருந்த கூடுதல் வரியை அக்டோபர் 15ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன துணை பிரதமர் லியூ ஹி வேண்டுகோளின்படி, சீனாவின் ரிப்பப்ளிக் ஆஃப் சீனா கட்சி 70வது ஆண்டுவிழா கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவானது எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆசியாவில் உள்ள பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன.
அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தை
இதனிடையே, வரும் நாட்களில் அமெரிக்கா-சீனா வர்த்தக அலுவலர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, அக்டோபரில் சீன துணை பிரதமர் லியூ ஹி (Liu He), அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான ராபர்ட் லைட்தீஸ்யும், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுசினையும் சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.