கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடங்கின. அதேசமயம், இந்த திடீர் ஊரடங்கால் வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தவிக்கின்றனர்.
அவர்களை மீட்கும் பணியில் அந்தந்த தூதரங்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தற்போது மே 17 ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமான சேவைகளை இன்று தொடங்கியது.
அதன் படி இந்தியாவிலிருந்து சான்பிரான்ஸிக்கோவிற்கும், லண்டனிற்கும் இன்று இரண்டு விமானங்கள் புறப்படவிருந்தன. இந்நிலையில், அந்த விமானங்களின் குழு உறுப்பினர்களுக்கான கரோனா பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வராததால் இன்று புறப்படவிருந்த விமானங்கள் ஒருநாள் தாதமாக நாளை புறப்படவுள்ளன.
இதனால், டெல்லியிலிருந்து சான் பிரான்ஸிக்கோவிற்கு இன்று புறப்படவிருந்த விமானம் நாளை(மே.8) அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மும்பையிலிருந்து இன்று லண்டனுக்கு புறப்படவிருந்த விமானம் நாளை காலை 6.30 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சிறப்பு விமானங்களின் ஒருபகுதியாக, நாளை முதல் மே 14 வரை லண்டன், சிங்கப்பூர், அமெரிக்காவிற்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய http://www.airindia.in/r1landingpage.htm இந்த இணையதளத்தை அணுகுமாறு ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விசாகபட்டிணம் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு: 8 பேர் மரணம்