அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் களத்தின் முக்கிய நிகழ்வான பொது விவாதம் கடந்த (செப்.29)ஆம் தேதி நடைபெற்றது.
இதில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் காரசாரமான விவாதத்தை மேற்கொண்டார்.
இந்த விவாதத்தில் கோவிட்-19, வரி விவகாரம், சட்டம் ஒழுங்கு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட தலைப்புகளில் இருவரும் விவாதித்தனர்.
ட்ரம்ப்-பிடனுக்கு இடையே அடுத்த பொது விவாதம் ப்ளோரிடா நகரில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், ட்ரம்புக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதற்கிடையே, பொது விவாதம் நடைபெறுமா இல்லையா என கேள்வி எழுந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இதில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுத்துவிட்டார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ள விவாதத்தில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அவர் பரப்புரையில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விவாதத்தை நடத்தும் ஆணையம் பிடனுக்கு ஆதரவாக செயல்படுகிறது என ட்ரம்ப் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு