மெக்சிகோவின் வட மத்திய மாநிலமான குவானாஜூவாடோவிலுள்ள இராபுவாடோ நகரில் பதிவு செய்யப்படாத போதை மறுவாழ்வு மையத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஏழு பேரில் மூவர் கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மறுவாழ்வு மையத்திலிருந்த அனைவர் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும், புகைப்படங்களைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடிவருவதாகவும் காவல் துறையினர் கூறினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எவ்வித நோக்கமும் கண்டறியப்படவில்லை எனவும், போதைப்பொருள் கும்பல்களைச் சேர்ந்த யாரேனும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர், இராபுவாடோவில் நடந்த நிகழ்வுகளுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறை இளைஞர்களின் உயிரைப் பறிப்பது மட்டுமல்லாமல், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு வடக்கு மெக்சிகோவிலுள்ள சிவாவா நகரில் போதை மறுவாழ்வு மையத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்கதல் இது.
மெக்சிகோவில் உள்ள பெரும்பாலான போதை மறுவாழ்வு மையங்கள், அரசிடம் உரிய அனுமதி பெறாமல், தனிப்பட்ட முறையில் இயங்குகின்றன. மறுவாழ்வு மையங்களுக்காக அரசு குறைந்த அளவு பணத்தை ஒதுக்குவதால், பலர், தங்களது குடும்பத்தினரை போதை பழக்கத்திலிருந்து மீட்க தனியார் மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பிவருகின்றனர்.
இதுபோன்ற மறுவாழ்வு மையங்களில் அவ்வப்போது போதை பொருள் விற்பனையாளர்கள் தஞ்சமடைவதால், இதுபோன்ற தாக்குதல் நடைபெற காரணமாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.