வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள பாஸ்டன், வாஷிங்டன், ஹூஸ்டன், நெவார்க், நாஷ்வில், பிட்ஸ்பர்க் மற்றும் ஹாரிஸ்பர்க் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த 11 இந்திய மாணவர்கள், இரண்டு லிபியான் மாணவர்கள், ஒரு செனிகல் மற்றும் வங்கதேச மாணவர்களை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.
இந்த மாணவர்கள் அமெரிக்க குடியேற்ற சட்டத்திற்கு எதிராக தங்கியிருந்ததாகவும், இல்லாத ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகப் போலியான ஆவணங்களை தயார் செய்து வைதிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் பயில விரும்பும் மாணவர்கள் அவர்களது துறையில் ஒரு வருடம் பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. மேலும், அந்நாட்டிலேயே தங்க விரும்புவோர் விருப்ப நடைமுறை பயிற்சியின் கீழ் 24 மாதங்கள் வரை தங்கலாம்.
இந்த நடைமுறைகளை மீறி, 15 மாணவர்களும் அமெரிக்காவில் தங்கியிருந்ததால் ஆபரேஷன் ஆப்டிகல் இல்லுஷன் எனும் முறையின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கைது குறித்து பேசிய அமெரிக்க காவலர்கள், "ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்காவை முதலிடத்திற்கு நகர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்த கைது நடவடிக்கை குடியேற்ற அமைப்பின் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்வதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு.
இவர்கள் சட்டத்தை மீறியதுடன், இல்லாத நிறுவனத்தில் பணி செய்வதாகக் கூறியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய பணி பறிபோகும் சூழல் ஏற்படுகிறது" எனத் தெரிவித்தார்.