கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவின் தேசிய நாடாளுமன்ற வளாக கட்டடங்களில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடங்களில் இருந்து கரும்புகைகள் வெளியேறியதை அடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா பொதுப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் பட்ரிசியா டி லில்லில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேசியப் பேரவை கட்டடத்தின் மூன்றாவது மாடியில்தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தக் கட்டடம் தென்னாப்பிரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரவையாகும். இது ஜனநாயகத்திற்கு பெரும் துக்கமான நாள்.
1800ஆம் ஆண்டு கால கட்டடங்கள்
இந்த விபத்து குறித்து, அதிபர் சிரில் ராமபோசாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, நாடாளுமன்ற வளாக நுழைவு வாயிலில் டி லில்லில் பேட்டியளித்தபோது, நாடாளுமன்றத்தின் பழைய வளாகத்தில் முதலில் தீ ஏற்பட்டதாகவும், தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் எனவும் கூறினார். அதன்பின்னரே, தீ விபத்து பரவல் அதிகமாகியுள்ளது.
கேப் டவுன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,"இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு அலுவலர்கள் முதலில் காலை 6 மணியளவில் தகவல் அளித்தனர். தற்போது 35 வீரர்கள் தற்போது பணியில் இருக்கின்றனர்" என்றார்.
இந்த நாடாளுமன்றத்தில் பல கட்டடங்கள் 1800ஆம் ஆண்டு அளவில் கட்டப்பட்டது. எனவே, அதிக வெப்பத்தால் கட்டடங்களின் கூரைகள் சேதாரமடைந்து இடிந்து விழ வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் அச்சப்படுகின்றனர். சுவர்களில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.