உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறைய தொடங்கியுள்ளது. பொதுமக்களின் இயல்நிலை, பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கிய இந்த கரோனா வைரஸ் தொற்றால், உலகளவில் இதுவரை 4 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட 11 லட்சத்து 49 ஆயிரத்து 142 பேர் உயிரிழந்தனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த மூன்று கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 39 பேர் பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கரோனாவால் அதிகளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் இதுவரை 87 லட்சத்து 46 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 2 லட்சத்து 29 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்தனர்.
தென் கொரியாவில் மேலும் 77 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அலுவலர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இரண்டு முக்கிய மீன்வளத் துறைமுகங்கள், ஸ்டால்கள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மீன் சந்தையுடன் தொடர்புடைய 609 பேர் புதிதாக கரோனா ரைவஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்புவின் சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு விரிவுபடுத்தியது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட கொழும்புவின் மேற்கு மாகாணத்தில் 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அங்கு பள்ளிகள், பொது அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.