சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து 280க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 666ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 73 ஆயிரத்து 307 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தென்கொரியாவில் தொடர்ந்து புதிதாக 441 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 14 நாள்களாக தென்கொரியாவில் மூன்று இலக்க எண்களில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. அதன் பிறகு தகுந்த இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 75 ஆயிரத்து 760 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 33 லட்சத்து 7 ஆயிரத்து 749ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஆக.26) ஒரே நாளில் 1,023 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 60 ஆயிரத்து 472ஆக அதிகரித்தாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக நாள்தோறும் 60 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. ஹாட் ஸ்பாட் விக்டோரியா மாகாணத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 27) கரோனாவல் 24 பேர் உயிரிழந்தனர். விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதை தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில் அடுத்தப்படியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: கரோனா மருந்தை விநியோகிப்பதற்கான வியூகம் மத்திய அரசிடம் இல்லை - ராகுல் காந்தி