சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் நோக்கங்களை அடைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உயர் கல்வியில் மாணாக்கரின் சேர்க்கையை மேலும் அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், பல்கலைக்கழகங்களின் தரத்தினை உயர்த்திடவும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் உயர் கல்வி மாணாக்கரின் சேர்க்கை விகிதம் 51:4 ஆகும். இது தேசிய அளவிலான (27:1) மாணாக்கரின் சேர்க்கை விகிதத்தைவிட அதிகமாக இருப்பினும், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இவ்விகிதம் குறைவாகவே இருந்துவருகிறது.
இந்நிலையைச் சீர் செய்யும்விதமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாணாக்கருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவதுடன் வேலைவாய்ப்புக்குத் தகுந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தேவையான வருவாய் வட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவும் தேசிய மதிப்பீடு, தரச் சான்றிதழ் (NAAC) பெற முயற்சிக்கவும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவது குறித்தும் செயல்திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவியரின் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகரிக்கவும், அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெற வழிவகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. GATE தேர்வில் மாணாக்கரின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும்விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், திறன்மிகு வகுப்பறைகள் (Smart Class Room), மின் ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
தொழிற்சாலைகளுடன் இணைந்து செயல்பட்டு மாணாக்கருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், பேராசிரியர்களுடன் மாணாக்கர் இணைந்து புதிய யுக்திகளை முயற்சிக்கவும், கட்டமைப்புகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகளில் மாணாக்கருக்கான தங்கும் விடுதிகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையத்தின் (Placement Cell) தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புக்கு உகந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் மின்னணு நூலகங்கள் ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டது. கல்லூரி வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உகந்த சூழல் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்கள் தரத்தை மேம்படுத்தவும் நிலையான நிதி மேலாண்மையை உருவாக்கி நிதிச்சுமையைச் சீராக்க கலந்தாலோசிக்கப்பட்டது. உலக, தேசிய அளவில் புகழ்பெற்ற அறிஞர்களை இணைய வழியில் விரிவுரைகள் வழங்க வசதிகள் ஏற்படுத்தவும், கற்றலை மேம்படுத்தும்விதமாக, கற்றல் மேலாண்மைத் தளத்தை (LMS) உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், மாணாக்கரின் திறன்களை வெளிக்கொணரும்விதமாக தமிழ்ப் பாரம்பரிய கலை திருவிழாக்கள் கொண்டாடவும் முடிவெடுக்கப்பட்டது.
அதிகளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் காலிப்பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள அனைத்து அரியவகை, பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை மின்னணுமயமாக்க முடிவுசெய்யப்பட்டது. தேசிய உயர் கல்வித் திட்டத்தின் மூலம் உயர் கல்வி நிறுவனத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கும், ஆராய்ச்சி, புத்தாக்கப் பயிற்சிகளுக்காகவும், திறன்பட பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக அரசின் உதவியுடன் அனைத்துத் துறைகளிலும் ட்ரோன்களைப் பயன்படுத்தும்விதமாக புதிய ட்ரோன் கார்ப்பரேஷன் நிறுவ ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.