நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வருபவர்கள் அரசின் கீழ் செயல்படும் தனிமைப்படுத்தும் மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருப்பதாவது, "விமானம், ரயில், பேருந்து, கார், லாரி உள்ளிட்ட போக்குவரத்து மூலம் டெல்லிக்கு வருபவர்களை கண்டறிந்து 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது 72 மணிநேரம் முன்பு ஆர்டிபிசிஆர் சோதனை முடிவை கொடுத்து 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதை கடைப்பிடிக்காதவர்கள் மீது , பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 51 முதல் 60 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி சுகாதாரத்துறை போதிய மருத்துவ வசதிகளின்றி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதுவரை டெல்லியில் 91 ஆயிரத்து 859 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், 11 லட்சத்து 43 ஆயிரத்து 980 பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.