திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 21) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,086 ஆக இருந்தது. இன்று (ஜூன் 22) ஒரே நாளில் புதிதாக 139 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,225 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையிலிருந்து வந்த 49 பேர், செங்கல்பட்டு, வேலூர், நெய்வேலி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவர், பெங்களூரு, மும்பையிலிருந்து வந்த தலா நான்கு பேர், மதுரையிலிருந்து வந்த மூன்று பேர், ராஜஸ்தானிலிருந்து வந்த இருவர், நோயாளியுடன் தொடர்பிலிருந்த 32 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற ஐந்து பேர், புறநோயாளிகள் பிரிவிலிருந்து 24 பேர், மருத்துவப் பணியாளர்கள் ஏழு பேர் உள்ளிட்ட 139 பேருக்கு இன்று (ஜூன் 22) கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த 139 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 455 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை அடுத்து முழு முடக்கத்திற்குத் தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மாவட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.