சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து நேற்று (அக்.19) வெளியான திரைப்படம், லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் - விஜய் - அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் எல்சியுவில் ( LCU ) இணையுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.
தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்காததால், காலை 9 மணிக்குதான் அனைத்து பகுதிகளிலும் வெளியானது. ஒரு முன்னணி நடிகரின் படம் பல பிரச்னைகளைக் கடந்து வெளியாகிறது என்றால் அது விஜய் படம் மட்டும்தான்.
இந்த நிலையில், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி ரூபாய் உலகம் முழுவதும் லியோ வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸ் நடித்து வெளியான ஆதிபுரூஸ் படமும் இதே வசூலை பெற்றிருந்தது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் படம் ரூ.129 கோடி வசூலித்து இருந்தது. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கும் முதல் விஜய் படமும் லியோதான்.
இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ.63 கோடி வசூலித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சிகள் இல்லாததால் தமிழகத்தில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்கின்றனர். ஆந்திராவில் ரூ.15 கோடியும், கர்நாடகாவில் ரூ.14 கோடியும், கேரளாவில் அதிகபட்சமாக ரூ.11 கோடியும் வசூலித்துள்ளது.
இந்த வாரம் பண்டிகை நாட்கள் என்பதால், லியோ படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் லியோ படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் பாக்ஸராக நடித்துள்ள 'ஆண்டனி' படத்தின் டீசர் வெளியானது!