சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர், இயக்குநர் நெல்சன். தனியார் தொலைக்காட்சியில் உதவி கதையாசிரியராக தன் பணியைத் தொடங்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார், 2010ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதல்முதலாக இயக்குநராக அறிமுகமானார். 2010ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து 'வேட்டை மன்னன்' என்ற படத்தை இயக்கினார், நெல்சன்.
படம் தோல்வியடைந்ததையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவை மையப்படுத்தி புதிய கதைக்களத்துடன் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். இவரது இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம், தமிழ் சினிமாவில் இவருக்கான வாய்ப்பை பெருமளவில் தேடித் தந்தது.
அதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் என்ற படத்துடன் கைகோர்த்தார், இயக்குநர் நெல்சன். அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, இவரின் அடுத்த படத்திற்கு நடிகர் தனுஷுடன் இணைவார் என்று முன்னதாக தகவல் வெளியாகிருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளராகும் திட்டத்தில் நெல்சன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அவரது உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இயக்குநர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்கிய நான்கே படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இயக்குநர் நெல்சன், தற்போது தயாரிப்பு துறையிலும் அவரது முத்திரையை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, தற்போது நெல்சனும் தயாரிப்புத் துறையில் இறங்குவது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: தள்ளிப்போகிறதா கமல்ஹாசன் - எச்.வினோத் கூட்டணி… காரணம் என்ன?