சென்னை: ’ரட்சன் தி கோஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது எழுத்தாளர் அசோக் பேசும்போது, 'இப்படத்திற்கு தமிழில் மொழி பெயர்த்து உதவியது நான் தான். முதலில் இந்த வாய்ப்பு கிடைத்ததும் பயம் இருந்தது. ஆனால், போன பிறகு சந்தோஷமாக இருந்தது. அதே மாதிரி தான் படமும் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாகார்ஜுனா சாருக்கு நன்றி' என்றார்.
ஒளிப்பதிவாளர் முகேஷ் பேசும்போது, 'இந்தப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. பெரிய நடிகர்களுடன் பணியாற்றுவது வரம். 2ஆவது கரோனா அலைக்கு முன்னரே ஆரம்பித்து, பெரிய சவால்களை சந்தித்து இன்று திரையரங்கிற்கு எடுத்து வந்திருக்கிறோம். சிறுவயதில் நானும் சென்னைவாசி தான்.
தமிழில் நாகார்ஜுனா சாருக்கு ரசிகர்கள் அதிகம். இந்த இரண்டு ஆண்டுகளில் என்னுடைய குடும்பம், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் முதலில் என்னிடம் நாகார்ஜுனா சாரைப் பற்றி கேட்டது தான் அதிகம்.
அவருடைய அன்பை நான் நன்கு அறிந்துகொண்டேன். சிறுவயதில் இருந்தே நான் பார்த்து ரசித்த கதாநாயகன். இன்று அவரை ஒளிப்பதிவு செய்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி’ என்றார்.
நடிகை சோனல் சௌகான் பேசும்போது, 'இந்த அருமையான வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழில் இப்படம் வருகிறது. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதாபாத்திரம் சவாலாகவும், திருப்தியாகவும் இருந்தது. தமிழ் சினிமா எப்போதும் தரமான படங்களைக்கொடுக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1ஆம் பாகம் மிகவும் நன்றாக இருந்தது' என்றார்.
தயாரிப்பாளர் சரத் பேசும்போது, 'இப்படத்தை பிரவீன் நன்றாக எடுத்திருக்கிறார். நாகார்ஜுனா சார் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். தினேஷ் சுப்பராயன் மற்றும் கிச்சாவும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். பரத் சௌரப் மற்றும் மார்க்கே ராபின் இசையமைப்பாளர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு பணிகளை தமிழ்ப்பையன் முகேஷ் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சோனி மியூசிக் இப்படத்தின் ஆல்பத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும்' என்றார்.
இயக்குநர் பிரவீன் பேசும்போது, 'இந்தப் படம் முழுவதும் பொழுதுபோக்கான படம். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் உணர்வுப்பூர்வமானவர்கள். நான் சென்னை சேலையூரில் உள்ள ஓர் கல்லூரியில் தான் பொறியியல் படித்தேன். அப்போதே தமிழ் மக்களிடம் இருக்கும் உணர்வுகளும், அன்பும் மிகவும் பிடிக்கும்.
இந்தப் படத்திற்காக நாகார்ஜுனா சாரை சந்திக்கும்போது அவரை திரையில் இப்படித்தான் காண வேண்டும் என்று நினைத்திருந்தேன். நாகார்ஜுனா சார் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி' என்றார்.
நடிகர் நாகார்ஜுனா பேசும்போது, 'நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதராபாத் அழைத்துச்சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும்போது, சொந்த ஊருக்குத் திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரியில் தான் படித்தேன். சென்னையில் எல்லா இடங்களும் எனக்குப் பரீட்சயம் தான்.
மணிரத்னம் சாரை மணி என்று தான் அழைப்பேன். பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிக்கு வாழ்த்துகள். பொன்னியின் செல்வன் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தில் நடித்த விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துகள். என் தம்பி கார்த்திக்கிற்கு வாழ்த்துகள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துகள்.
நான் தமிழில் ரட்சகன் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே, மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தின் மூலம் பிரபலமடைந்தேன். அவருடன் கீதாஞ்சலி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. பொன்னியின் செல்வன் 1 படத்தில் ஐஸ்வர்யா, கார்த்தி, விக்ரம் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.
உதயம் படத்தில் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பிறகு, ரட்சகன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'தோழா' படமும் வெற்றியடைந்தது. 'தோழா' படத்தில் கார்த்தியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அப்படத்தை மக்கள் கொண்டாடினார்கள். விமர்சனங்களும் நன்றாக கொடுத்திருந்தார்கள்.
முதலில் ரட்சன் படத்தை தமிழில் வெளியிட யோசனை இல்லை. பிற மொழிகளில் வெளியிட வேண்டும் என்று யோசித்தபோது, தமிழில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு தமிழில் மொழிபெயர்த்து கொடுத்த அசோக் அவருக்கு நன்றி. தமிழில் நான் தான் டப்பிங் பேசி இருக்கிறேன். தமிழ் உச்சரிப்பிற்கு உதவிகரமாக இருந்தார். இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகிறது.
கரோனாவிற்குப் பிறகு சமீபகாலமாகத்தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் இயக்குநர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் இயக்குநர் பிரவீன். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனத்தை பிரவீனும், சண்டைக் காட்சிகளை தினேஷும் சொல்லிக்கொடுத்தார்கள். ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்திருக்கின்றன’ என்றார்.
இதையும் படிங்க: ’பிளாக் பாந்தர்: வக்கண்டா ஃபாரவர்’ டிரைலர் வெளியீடு; புதிய பிளாக் பாந்தர் அறிமுகம்