யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் நம் உடலில் இனம்புரியாத சிலிர்ப்பு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. ’தீம்’ இசை என்று சொல்லப்படும் கதாநாயகனின் பிம்பத்தை, தூக்கி நிறுத்தும் இசை தான் இவரது தனி அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
யுவன் முதன்முதலில் இசை அமைத்த ’அரவிந்தன்’ படத்திலேயே 'ஈர நிலா' என்ற பாடல் மனதிற்கு அத்தனை இதமாக இருக்கும். ஆனால், யுவன் யார் என்று ரசிகர்களுக்குத் தெரிய வந்தது சூர்யா, ஜோதிகா நடித்து வெளியான ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படம் மூலம் தான். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தளித்தது.
‘இரவா பகலா’ என்ற பாடல் இன்று வரை அனைவருக்கும் ஃபேவரைட் ஆக இருக்கிறது. அதன்பிறகு வெளியான ’தீனா’ படத்தில் மாஸ் ஹீரோவுக்கு உண்டான பில்டப்பை உயர்த்தி பிடிக்கும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பார்.
இளையராஜாவின் மகனாக அறிமுகமானாலும் தந்தையின் சாயல் பெரிதும் இல்லாமல் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர். 150 படங்களைக்கடந்து, 25 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு, யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், அவரின் பின்னணி இசை தனி சிறப்புமிக்கதாக கொண்டாடப்படுகிறது. தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைக்கட்டி வைத்திருப்பது யுவன்ஷங்கர் ராஜாவின் தனிச்சிறப்பு. அதுமட்டுமின்றி இயக்குநர்களின் இசை அமைப்பாளராகவும் இருந்து ஏராளமான இயக்குநர்களின் இதயமாகவும் இருந்துள்ளார்.
இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா எனப் பல இயக்குநர்களும் யுவன் ஷங்கர் ராஜா இசை இல்லாமல் படம் இயக்கியிருக்க முடியாது என்பது அவர்களே சொன்ன நிதர்சனமான உண்மை. பாடகராகவும் யுவன் முத்திரைப் பதித்தார். அவர் பாடிய பாடல்கள் எல்லாம் இதயத்தில் ஏதோ செய்பவை.
இப்போதும் இவரை போதைப்பொருள் விற்பவர் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவரது குரலும் இசையும் இணைந்துவிட்டால் அப்பாடலை கேட்கும்போது நீங்கள் இந்த உலகில் இருந்தாலும் ஆன்மா, இந்த பிரபஞ்சத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் உணர்வைத் தரும். உருகவைக்கும் இசையை சுலபமாக நம்முள் புகுத்துவதில் யுவன் கில்லாடி.
’ஒரு நாளில்’, ’பறவையே எங்கு இருக்கிறாய்’, ’ஆனந்த யாழை’, ’கண் பேசும் வார்த்தைகள்’ என்று எத்தனை எத்தனையோ பாடல்கள் இப்போது கேட்டாலும் இதயத்தில் கண்ணீர் துளி கசியும். உடலை உருக்கும். மங்காத்தா, பில்லா, சமீபத்தில் வந்த மாநாடு உள்ளிட்ட படங்களின் பின்னணி இசையை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அத்தனை அற்புதமாக இருக்கும்.
இன்னும் இசையால் நம்மை தாலாட்டிக் கொண்டே இருக்க பிறந்தநாள் வாழ்த்துகள், யுவன் ஷங்கர் ராஜா.
இதையும் படிங்க: 'வெந்து தணிந்தது காடு' - ஆடியோ வெளியீட்டுக்குத் தயாராகும் அரங்கம்!