சென்னை: மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது.
'யானை முகத்தான்' இப்படத்தில், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கிவிடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார்.
இவரிடம், யோகிபாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அத்துடன் ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இப்படி லூட்டி அடிக்கும் இவர்களைச்சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இதை சுவாரசியமாக ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார்.
இவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக மல்லியக்கா கேரக்டரில் ஊர்வசியும், சிறிய பான் மசாலா கடை நடத்தும் மைக்கேலாக கருணாகரனும் நடிக்கிறார்கள். யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி, பின் ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது முடிந்தது. கார்த்திக் S நாயர் ஒளிப்பதிவு அமைக்க, சைலோ படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க:தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி ஆகியோர் திருமணம்!