நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் சில படங்களில் நாயகனாக நடித்தாலும், மண்டேலா திரைப்படம் தான் இவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொம்மை நாயகி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாசமுள்ள தந்தையாக நடித்து கலங்க வைத்தார்.
இதனையடுத்து யோகிபாபுவுக்கு கதை நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் தங்களது திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போது கதை நாயகனாக நடித்தனர். ஆனால் அவை பெரிதாக எடுபடவில்லை. ஆனால் யோகி பாபு தொடக்கத்தில் சொதப்பினாலும் பிறகு சுதாரித்துக் கொண்டு மண்டேலா, பொம்மை நாயகி என நல்ல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்கத்தில் ஐகோர்ட் மகாராஜா என்ற படத்தில் நடிக்கிறார்.
ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் "ஐகோர்ட் மகாராஜா” இந்த படத்தில் யோகி பாபு மற்றும் அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கின்றனர். இவர்களுடன் மதுசூதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என பல்வேறு நடிகை, நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. மண்டேலா, பொம்மை நாயகி வரிசையில் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.