சென்னை: தமிழ்த்திரையில் முக்கிய நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் ஹரி பேசுகையில், ‘நானும், அருண்விஜய்யும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 ஆண்டுகள் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.
’சேவல்’ படத்திற்குப் பிறகு ஜிவியுடன் பணிபுரிந்துள்ளேன். சமுத்திரக்கனி சார் ஒரு உதவி இயக்குநர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்டப்படங்கள் போல் இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி’ எனத்தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பேசுகையில், ‘நானும், இயக்குநர் ஹரியுடன் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினேன். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். அவருக்கு நன்றி. சுற்றியுள்ளவரைப் பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருந்தன.
ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்துமுடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்த படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. ஜிவி உடன் இது எனக்கு முதல் படம்’ என்றார்.
பின்னர் பேசிய நடிகை பிரியா பவானி சங்கர், ‘இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்கக் காரணம் இயக்குநர் ஹரி சார் தான். ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்தக் கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பைப் பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான்’என்றார்.
மேலும் நடிகர் KGF ராமசந்திர ராஜு கூறுகையில், ‘இந்தப் படத்தில் ஹரி சார் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அவர் நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். நிறைய கற்றுக்கொண்டேன். அருண் விஜய் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் பல சிக்கல்களை கடந்து இந்தப் படத்தில் நடித்தார். ஆக்சன் காட்சியில் அடிபட்ட போதும், மறுநாள் சூட்டிங் வந்தார். அவருக்கு இந்தப் படம் பெரிய வெற்றி கொடுக்கும். படக்குழுவுக்கு நன்றி’ என முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: 'நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்' - எஸ்.ஜே. சூர்யா