சென்னை: 2022 - 2024ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே. பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள்(2 நபர்கள்), இணைச்செயலாளர்கள்(4 நபர்கள்), செயற்குழு உறுப்பினர்கள் 12 நபர்கள் என்று தேர்தல் நடைபெற்றது. இந்தத்தேர்தல் காலை 8 மணி முதல் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்று, அதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.
எழுத்தாளர் சங்கத்தேர்தலில் மொத்த உறுப்பினர்கள் 570 பேர். அவற்றில் வாக்களிக்கத்தகுதியானவர்கள் 485 பேர் என்கிற நிலையில் இன்றைய தினம் 346 பேர் வாக்களித்து இருந்தனர். இதில் தலைவர் பதவிக்குப்போட்டியிட்டு பாக்யராஜ் 192 வாக்குகளும் சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர். ஆக, பாக்கியராஜ் 40 வாக்குகள் வித்தியாசத்தில் பாக்யராஜ் தலைவராக வெற்றி பெற்றார்.
அதேபோல் பொருளாளர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அணியின் சார்பில் போட்டியிட்ட ரமேஷ் கண்ணா 164 வாக்குகளுடன் பெற்றார். பாக்யராஜ் அணியின் சார்பில் போட்டியிட்ட பாலசேகரன் 176 வாக்குகள் பெற்று 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாக்யராஜ், “நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் அணியின் வெற்றி மட்டும் அல்ல; சங்கத்தின் வெற்றியாகக் கருதுகிறோம். எழுத்தாளர்கள் சங்கத்திற்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
நாங்கள் ஜெயித்துவிட்டோம். அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சங்கத்திற்காகப் பாடுபடுவோம். இதுவரை தேர்தலுக்காக இரண்டு அணியாக இருந்த நாங்கள், இனி ஒன்றிணைந்து செயல்படுவோம். எழுத்தாளர்களுக்கும் 'ராயல்டி' போன்ற ஒரு திட்டத்தினை வரும் காலங்களில் கொண்டு வருவோம்” என பாக்யராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி வரையிலும் போதைப்பழக்கம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது - நடிகர் கார்த்தி