சென்னை: வெற்றிமாறன் என்றால் வடசென்னை, விசாரணை, அசுரன் போன்ற தரமான படங்களை இயக்கியவர் என்பது அனைவருக்கும் தெரியும். குறைந்த அளவே படங்களை இயக்கியிருந்தாலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. விருது வாங்க வேண்டும் என்பதற்காகவே படமெடுப்பவர்கள் மத்தியில் தனது ஒவ்வொரு படத்தையும் தரமாக எடுத்து விருது பெரும் வித்தைக்காரர்.
இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆசைப்படும் நிலையில் இவரோ நகைச்சுவை நடிகர் சூரியைக் கதை நாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கினார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். சிறிய படமாகத் தொடங்கி பின்னர் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
சூரி கடைநிலை போலீஸாகவும் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்கள் சிலவற்றைத் தழுவி இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் ரயில் குண்டு வெடிப்பு, வாச்சாத்தி கலவரம் என குறிப்பிட்ட சம்பவங்கள் தான் விடுதலை படத்தின் கதைக்களம். இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டது. தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது விடுதலை திரைப்படம்.
இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் நன்றாக இருப்பதாகப் படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இரண்டாம் பாகம் உடனே வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திரை பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து விட்டு வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விடுதலை திரைப்படத்தைப் பார்த்து வியந்து படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார். வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்த்தைச் சந்தித்து உள்ளனர். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோரும் இருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த்துக்குத் தனியாக விடுதலை திரைப்படம் திரையிடப்பட்டது. ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து வியந்து இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத கதைக்களம் கொண்டது விடுதலை திரைப்படம் என பாராட்டினார். இந்த படத்துக்கும் வெற்றிமாறன் மற்றும் சூரி இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- — Rajinikanth (@rajinikanth) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Rajinikanth (@rajinikanth) April 8, 2023
">— Rajinikanth (@rajinikanth) April 8, 2023
வெற்றிமாறனின் மற்ற படங்களைப் போல இதில் அழுத்தம் இல்லை என்றும், உண்மையான கதையை மாற்றி வெற்றிமாறன் எடுத்துள்ளதாகவும் இலக்கியவாதிகள் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் வசூல் சாதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Indian 2: தைவானில் இந்தியன் 2 படக்குழு; புதிய அப்டேட் வெளியீடு!