சென்னை: பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தின் மூலம் தான் இயக்குநர் ஷங்கர் அறிமுகமானார். அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோன் தற்போது தயாரித்து வருகிறார். இப்படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசை அமைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தயாரிப்பாளர்கள் குஞ்சுமோன், கே.ராஜன், அபிராமி ராமநாதன், தியாகராஜன், எஸ்.ஆர் பிரபு, ரவி கொட்டாரக்காரா, நடிகர்கள் சுமன், காளி வெங்கட், சென்ட்ராயன், நடிகைகள் சித்தாரா, குட்டி பத்மினி, விஜி சந்திரசேகர், சத்யபிரியா, சுதா ராணி, மற்றும் இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, தோட்டாதரணி, பாடலாசிரியர் வைரமுத்து, லைகா தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் செண்பக மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும் போது, “சினிமா தொடங்கிய காலம் முதல் இந்திய சினிமா முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமா தற்போது சர்வதேச அளவில் திகழ்ந்து வருகிறது. அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கு முக்கியமானது.
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் பங்கு அதிகம். பொழுதுபோக்கு கடந்து சமூக அக்கறை கொண்ட படங்களை தமிழ் சினிமா கொடுத்து வருகிறது. ஜென்டில்மேன் படமும் அதற்கு ஒரு உதாரணம். குஞ்சுமோன் தயாரித்த நல்ல படங்கள் அதிகம்.
கீரவாணி 33 ஆண்டு காலமாக இசைத்துறையில் சாதித்து வருகிறார். இவருக்கு ஆஸ்கர் விருது எப்போதோ கிடைத்து இருக்க வேண்டியது, இது தாமதமாக கிடைத்துள்ளது. அவரை வாழ்த்த வயதில்லை. தமிழ் சினிமா தற்போது மிகpபெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஜென்டில்மேன் 2 மிகப் பெரிய வெற்றியை பெற எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராம் சரண் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!