செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரி தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், ரோபோ சங்கர், ஆனந்த் ராஜ், உதயநிதி ஸ்டாலின், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஆனந்த் ராஜ், விக்ரம் நீங்களும் பான் இந்தியா நடிகர் தான். இந்த படத்தில் நானும் நடித்துள்ளேன். சமீபத்தில் உதயநிதி ஒரு பேட்டியில் இது தான் என்னுடைய இறுதி படம் என்று சொல்லியிருந்தார். அடுத்து நீங்கள் எங்கு செல்ல உள்ளீர்கள் என்று எனக்கு தெரியும்.
எல்லாரும் உதயநிதியிடம் கோரிக்கை வைக்கின்றனர். நானும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு நடிக்க வேண்டும். உங்களுடன் நாங்களும் நடிக்க வேண்டும். திரைத்துறையில் இருந்து தான் நம் நாட்டை ஆட்சி செய்கின்றனர். திரை கலைஞர் தான் இங்கு ஆள முடியும். கலைஞர் திரைத்துறையில் இருந்து தான் வந்தவர். நாளை நீங்களும் அங்கு இருப்பீர்கள் என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பேசியபோது, படத்தையும், இசையையும் பார்த்து விட்டு சொல்லுங்கள். வெற்றி என்பது அனைவரது முயற்சியால் தான். கோப்ரா வெற்றி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன் என்று கூறினார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, விக்ரம் சார் படங்களை பார்த்து நாங்கள் வளர்ந்தவர்கள். நேற்று சிறிது நேரம் படம் பார்த்தேன். அதில் எவ்வளவு உழைப்பு போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. விக்ரம் படம் கமலுக்கும், லோகேஷுக்கும் வெற்றியாக அமைந்ததை போல இந்த படம் அஜய் ஞானமுத்துவுக்கு சிறப்பாக அமையும்.
நடிகர் விக்ரம் பேசும் போது, கோப்ராவின் வெற்றியை இங்கு பார்க்க முடிகிறது. யூடியூபில் எனக்கு உடல் நிலை குறித்து தம்ப் நெயில் எல்லாம் போட்டிருக்கிறார்கள். எனக்கு நெருங்கியவர்கள் மிகவும் வேதனைப்பட்டார்கள். ரசிகர்கள் உட்பட. நான் நன்றாக இருக்கிறேன் என்று இந்த மேடையில் தெரிவித்து கொள்கிறேன்.
இன்று கனவு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கிறேன். யாராக இருந்தாலும் நிச்சயமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். இந்த படத்தில் சிக்கலான சீன்கள் இருக்கிறது.
உதயநிதியிடம், எப்படி உங்கள் எல்லா படமும் வெற்றி பெறுகிறது என்று தோன்றுகிறது. நீங்கள் படத்தை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இர்பான் பதான் எப்போதும் எனக்கு ஹீரோ தான். அவர் எப்போது அடித்தாலும் சிக்சர் தான். ரோஷன் எதார்த்தமான வில்லனாக நடித்துள்ளார், ரவிக்குமார் சொல்லும் விஷயங்கள் எங்களை ஊக்குவிப்பதாக இருக்கும்.
விழாவிற்கு வந்த நடிகர் துருவ் விக்ரமிற்கு நன்றி. மகான் படத்தில் நன்றாக நடித்துள்ளீர்கள். உங்கள் அப்பா நிச்சயமாக மகிழ்ச்சி அடைவார் என்று தன் மகனுக்கு நன்றி தெரிவித்தார். இதில் 7 விதமாக குரல்களில் டப்பிங் கொடுத்துள்ளேன் என்று பேசினார்.
இதையும் படிங்க: ”வணங்கான்”: பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு