சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் திரையரங்கில் பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், "தமிழ் சினிமாவின் ரசிகனாக இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படுகிறேன். நடிகனாக, ரசிகனாக இந்த படத்தை பார்க்கும்போது அனைவருக்கும் பிரமிப்பு இருக்கும் என நம்புகிறேன்.
இப்படத்தை பார்க்கும்போது தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக உணர்வு ஏற்படுகிறது. ஆரோக்கியமான போட்டியும், பொறாமையும் இருக்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன். இந்த திரையுலக கப்பலில் நானும்தான் இருக்கிறேன். இதில் ஓட்டை விழுந்தால் எனக்கும் தோல்விதான்.
தமிழ் சினிமாவிற்கு 100 வயது. எனக்கு 63 வயது. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் சந்தோஷம். மொழி அரசியலை சினிமா துறையிலாவது இல்லாமல் செய்ய வேண்டும். கார்த்தி நடித்த கதாபாத்திரம் நான் நடிப்பதாக இருந்த வேடம். நன்றாக நடித்துள்ளார். விக்ரமும் பிரமாதமாக நடித்துள்ளார்.
நான் தயாரித்தது போல ஒரு சந்தோஷம். இந்த கூட்டுறவு நீடிக்க வேண்டும். என் படத்திற்கும் நீங்கள் கொண்டாட வேண்டும் என விக்ரம், கார்த்தியிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் என் படம் கொஞ்சம் சுமாராக இருந்தால் என்னிடம் தனியாக சொல்லுங்கள், என மற்ற நடிகர்களிடம் கமல் சொன்னதும் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது.
மேலும், பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமலஹாசன்,இந்து மதம் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை. அப்போது சைவம், வைணவம் என இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றார்.
இதையும் படிங்க: "ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்" இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு எம்பி ஜோதிமணி ஆதரவு