சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் மற்றும் இயக்குநருமான பாக்யராஜ் தேர்வானார்.
2020ஆம் ஆண்டு தேர்தலிலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் மேடையில் பேசியதாவது, 'அளவோடு பேசுபவர்களை உலகம் பாராட்டும். அதனால் அளவோடு பேசுகிறேன். தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது. எதிர் அணியினருக்கும் இந்தப் பாராட்டு.
தேர்தலில் வெற்றி பெற்றது பெரும்பாடு இல்லை. இனிமேல் எதிரிகள் யார் என்று தெரிந்துகொண்டு, அவர்களை கலையப் போவதுதான் பெரியபாடு. சாமி என்பது உனக்குள்ளே இருக்கும் மனசாட்சி தான் சாமி. இந்த மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.
மேலும் சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள் தான். கதை ஆசிரியர்களின் உரிமைக்காகப் போராடுவது எங்களது கடமை. எதுவும் இல்லை என்றால் தர்ணாவில் ஈடுபட்டாவது எங்களது உரிமையைக் கேட்போம்.
எழுத்தாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை, நான். இருப்பினும் என்னைத்தேர்தலில் ஜெயிக்க வைத்துள்ளனர். எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து எல்லா உதவிகளும் செய்து தருவேன். எங்களுக்கு எதிர் அணி என்று எதுவும் இல்லை, எல்லோரும் ஒரே அணி தான்' என்றார்.
இதையும் படிங்க:அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாரா கமல்ஹாசன்...?