சென்னை: தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான திரைப்படம், வாரிசு. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துடன் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படமும் வெளியானது. இரண்டு படங்களும் வசூல் ரீதியில் வெற்றிப்படங்களாக அமைந்தன.
வாரிசு திரைப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார். தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வெளியானது. அங்கும் வெற்றிப்படமாக அமைந்தது.
தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக ரஞ்சிதமே பாடல் சமூக வலைத்தளங்களில் இப்போது வரையிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. குடும்ப ரசிகர்களை சென்றடைந்துள்ள இப்படம் விஜயின் சினிமா வாழ்கையில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் வரவேற்புடனும் சேர்ந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி மிகப்பெரிய சாதனையையும் செய்தது. இதுவரை ரூ.350 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த பிப்.23ஆம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியாகி, குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனைப் படைத்தது. ஓடிடியில் வெளியானாலும் கூட வாரிசு திரைப்படம் தமிழ்நாடெங்கும் பல திரையரங்குகளில் தற்போது வரையிலும் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று வெற்றிகரமாக 50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது, வாரிசு திரைப்படம். தமிழ்நாடெங்கும் 25 திரையரங்குகளில் 50-வது நாளை தொட்டுள்ளது, வாரிசு. இதையடுத்து திரையரங்கு நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்களால் வாரிசு 50-வது நாள் கொண்டாட்டங்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:"நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்; எனக்கு நண்பர்களே கிடையாது"- செல்வராகவன் வருத்தம்