சென்னை: நடிகர்கள் சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் 'தீர்க்கதரிசி' படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்பட இயக்குநர்கள் ஹரி, ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, நடிகர் நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில் பேசிய நடிகர் நாசர், சத்யராஜ் பற்றி பேச வேண்டும் என்றால் 3 மணி நேரம் வேண்டும் என பெருமையாக கூறினார். இதனையடுத்து பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, உறவும் நட்பும் இருக்கும் வரை திரைப்படத் துறை நன்றாக இருக்கும் என்றார். மேலும் தீரன் படம் பார்க்கும்போது என்ன தோன்றியதோ, அந்த எண்ணம் இந்த படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதும் தோன்றியது என படக்குழுவினருக்கு உத்வேகத்தை அளித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ஒற்றுமை இல்லாத சந்தர்ப்பத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்ததை பார்க்கும்போது வியப்பாக உள்ளது என தயாரிப்பாளருக்கு நன்றி கூறினார். அதேநேரம் மொத்தமாக 30 நாட்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 300 நாட்கள் வரை ஓடக்கூடிய சக்தி வாய்ந்தது என பெருமைபட பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய தீர்க்கதரிசி என்றும், அதனால்தான் எம்ஜிஆர் முதலமைச்சரானார் என்றும் கூறினார். இதனையடுத்து இயக்குநர் ஹரி, தனது சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசினார்.
மேலும் நடிகர் ஸ்ரீமன், ‘Speed’ என்ற ஆங்கில படம் எவ்வளவு வேகமாக இருக்குமோ, அந்தளவுக்கு இந்த படமும் வேகமாக இருக்கும் என பாராட்டினார். நடிகர் தம்பி ராமையா பேசுகையில், தன்னுடைய மலபார் போலீஸ் திரைப்படமும், மைனாவும் வாழ்க்கையில் தொடக்கமாகவும் இயக்கமாகவும் உள்ளது என நெகிழ்ந்தார்.
பின்னர் பேசிய நடிகர் சத்யராஜ், இந்த படம் போன்று எடுக்க சினிமாவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றும், ஜோசியம் பார்த்து படம் எடுக்க வரக்கூடாது என்றும் கூறினார். ஒரு ஹீரோவுக்கு தகுந்த ஹீரோயிசம் இருக்க வேண்டும் என கூறிய அவர், அதைத் தாண்டினால் ரசிகர்களுக்கு பிடிக்காது எனவும் தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
மேலும் கதையை ஹீரோவாக வைத்து நகர்ந்தால்தான் சரியாக இருக்கும் என கூறிய சத்யராஜ், எம்ஜிஆர் - சிவாஜி ஆகியோரின் வசனங்களை வேறு யாராவது பேசினால் என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மாஸ் ஹீரோவுக்கு கதை செய்வது வேறு, பொது ஹீரோவுக்கு கதை செய்வது வேறு என கூறினார்.
இதையும் படிங்க: 'ராத்திரி... சிவராத்திரி...' சிவராத்திரியில் அமலாபால் செய்த பூஜை!