சென்னை: இயக்குனர் கார்த்திக் வர்மா இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் நடித்த படம் 'விரூபாக்ஷா' (Virupakasha). கடந்த மார்ச் 21-ல் வெளியாகிய இப்படத்தில் சாய் தரம் தேஜுக்கு சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் வெளியாகி 8 நாட்களே ஆன நிலையில், இப்படம் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து, இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்.29) சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம் தேஜ், சம்யுக்தா, தனஞ்செயன், சக்திவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தமிழில் வெளியிடுகிறார். மே மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குனர் கார்த்தி, 'தமிழ் இயக்குனர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். என் படம் தமிழில் வெளியாவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்டூடியோ கிரீனுக்கு நன்றி கூறினார். இப்படம் மிக சிறப்பான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படமாக இருக்கும். தெலுங்கு மக்கள் ரஜினி, சூர்யா உள்ளிட்டோரின் படங்களை ரசிப்பார்கள். உங்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஹீரோ என்னிடம் காதல் படத்தை எதிர்பார்த்தார். ஆனால், நான் இந்த ஹாரர் படத்தை சொன்னதும் அவருக்கு பயமாக இருத்தது. நடிக்க முடியாது என்றார். பின்னர் இயக்குனர் சுகுமாரின் திரைக்கதையை பார்த்து ஒத்துக்கொண்டார். இது எந்த ஆங்கில படத்தின் தழுவல் கிடையாது' என்று தெரிவித்தார்.
இவரைத்தொடர்ந்து பேசிய படத்தின் கதாநாயகி சம்யுக்தா, 'தனக்கு தமிழில் 'வாத்தி' படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததாகவும், அதற்கு தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். விரூபாக்ஷா திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த அவர், தியேட்டரில் பார்க்கும் போது அந்த உணர்வு சிறப்பாக இருக்கும் என்றும் படம் பார்த்துவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒரு விஷயத்தில் முதலில் நான் ஓகே சொல்லிக்கொண்டு பின்னர் நான் யோசிப்பேன் என்றும் பிறந்ததில் இருந்தே எனக்கு நம்பிக்கை அதிகம் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்த விரூபாக்ஷா போன்ற கமர்ஷியல் படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டத்தக்கது என்றும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத மாதிரி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை அனைத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் வைப்பதாகவும், திறமையான நடிகைகள் இங்கு இருப்பதாகவும், ஆகவே பெண் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று வலியுறுத்தினார். மேலும், வாத்தி படத்தை விட இப்படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகவும்' அவர் கூறியுள்ளார்.
பின்னர் பேசிய சாய் தரம் தேஜ், 'நான் ஒரு சாதாரண டி.நகர் பையன் என்றும் தான் இங்குதான் படித்ததாகவும் ரசிகர்களின் ஆசிர்வாதத்தால்தான் இந்த உயர்வுக்கு வந்துள்ளதாகவும் கூறினார். கஷ்டப்பட்டு எடுத்துள்ள இந்த படத்திற்கு நீங்கள் தான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழில் படம் பண்ண ஆசைப்பட்டது தற்போது நடந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ரஜினிதான் தனது இன்ஸ்பிரேஷன் என்றும் 'சந்திரமுகி' படம்தான் இந்த படத்துக்கு உந்துதல் என்று கூறியதோடு, ஒரு கூட்டு முயற்சியால் உருவாகிய இக்கதையை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். மேலும், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது போல், ரொமான்ஸ் வேணுமா ரொமான்ஸ் இருக்கு, ஹாரர் வேணுமா ஹாரர் இருக்கு என்றும் அவர் நகைப்பாக பேசினார்.
இதையும் படிங்க: Pichaikkaran 2: பல தடைகளை தாண்டி வெளியானது 'பிச்சைக்காரன் 2' ட்ரைலர்!