சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் ரூ.520 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை ஜெயிலர் பெற்றுள்ளது.
தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டு போய் இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த வெற்றி மிகப் பெரிய எனர்ஜியை கொடுத்துள்ளது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மிகப் பெரிய வசூலை ஜெயிலர் பெற்று வருகிறது. மேலும் பீஸ்ட் பட தோல்வியால் துவண்டு இருந்த நெல்சனுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
ஜெயிலர் படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார் வரும் காட்சிகளை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் ஸ்டைல் மற்றும் நடிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிக்கும் வகையில் இருந்தது. அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.
ஜெயிலர் வெளியீட்டுக்கு முன்னதாக இமயமலை சென்றார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இமயமலை சென்ற ரஜினி அங்கு பல்வேறு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பின் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார். பின்னர் உத்திரப்பிரதேசம் சென்ற ரஜினிகாந்த் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னை திரும்பிய ரஜினி சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக யோகி மற்றும் ஞானிகளின் கால்களில் விழுவது என் வழக்கம் என கூறினார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் நேற்று ரஜினி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ரஜினிகாந்த் வெட்டிய கேக்கில் தலைவர் நிரந்தரம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதுவும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கக்கன் திரைப்படம்: "இளைய சமுதாயத்துக்கு நல்ல படம்" கக்கனின் பேத்தி நெகிழ்ச்சி