சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலப் பிரிவு சார்பில் சென்னை கிண்டி நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தக்ஷின் - தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சாமிநாதன், ''உதயநிதி அமைச்சரான பின் நானும், அவரும் இணைந்து கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதில் பெருமையாக உள்ளது. திரைத்துறைக்குத் தேவையான ஆலோசனைகளை உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது வழங்கி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதால், எனக்கு பணிச்சுமை குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் புதிய ஷூட்டிங் தளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் திரைப்படங்களை அதிகளவில் தயாரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பது பெருமையாக உள்ளது'' எனப் பேசினார்.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, ''சென்னையில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்ற திட்டத்துக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஆவணப்படங்களுக்கு பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடத்திற்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பேரறிஞர் அண்ணா காலத்தில் திராவிட கொள்கைகள் தமிழ்நாடு முழுவதும் பரவ தமிழ் சினிமா முக்கியப்பங்கு வகித்தது. என் தாத்தா கருணாநிதி தமிழ் சினிமாவின் மடையை மாற்றினார். என் அப்பாவும், நானும் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் தான்.
சில நாட்களுக்கு முன் ஒருவர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2000 கோடி என போகிற போக்கில் அடித்துவிட்டார். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மதிப்பு என்னவென்று இங்கு இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு தெரியும்.
இந்திய சினிமாவின் மொத்த வருவாயில் பாதியை தென்னிந்திய சினிமா தான் தருகிறது. சினிமாத்துறை நன்றாக செயல்பட்டால் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும். சினிமாத்துறை சார்ந்து அரசிடம் நிறைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. அவையெல்லாம் நிறைவேற ஒற்றுமை தான் இங்கு முக்கியம்” என அமைச்சர் உதயநிதி பேசினார்.
முன்னதாக உரையாற்றிய இயக்குநர் வெற்றிமாறன், ''கலை எல்லையைக் கடந்து போகும். ஒரு பொது மனிதன் பல விதமான உலகத்தையும் நேரத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழலை கலை உருவாக்கியது. கரோனாவிற்கு பிறகு உண்மையில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இதுவரை, தங்களது மண் தாண்டிய ரசிகர்களை நோக்கி படங்கள் உருவாக்கப்படவில்லை.
இந்தக் கதை அவர்களுக்கான கலாசாரம் இல்லை என பொது ரசிகர்களுக்கான படம் எடுப்பதில் தோல்வியடைந்தோம். ஆனால், இப்போது கலாசாரம் தாண்டி, எல்லைகளைத் தாண்டி கலை செல்கிறது. ஆஸ்கர் விருது பெறும் படங்கள் எடுக்க வேண்டும் என ரிஷப் சொன்னார். ரிஷப், ஆஸ்கருக்காக படம் எடுக்க வேண்டாம். நம் கதையை நாம் எடுத்து, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.
தென்னிந்திய சினிமா வசூல் அதிகரித்திருப்பதற்கும், தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் காரணம் நம் கதையை, நம் மக்களுக்காக, நம் மொழியில் உணர்வுகளை பிரதிபலித்து படங்கள் எடுப்பதால் தான், நாம் இந்தளவுக்கு வெற்றிகளைப் பெற முடிந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: மாமன்னன் படத்தில் வேறு மாதிரியான வடிவேலுவை பார்ப்பீர்கள் - இயக்குநர் மாரி செல்வராஜ்!