புதுச்சேரி: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த இந்த படத்தை, ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே. சுரேஷ் வெளியிட உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஏப். 17) புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா, இளையராஜா இருவருடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர்" என்றார்.
இதையடுத்து சீனு ராமசாமி, "நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் OTT உரிமையை வாங்கிய அல்லு அரவிந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார்.
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இப்படம் இளையராஜா பிறந்த ஊரான பண்ணையபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இறுதியாக பேசிய யுவன் ஷங்கர் ராஜா, "படம் வெளியாவதில் பல சிக்கல்களும், குழப்பங்களும் இருந்தன. தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் படத்தை பார்த்து மிகவும் பிடித்திருக்கிறது என்றவுடன் ஒரு நேர்மறையான உணர்வை வந்தது. நானும் சீனு ராமசாமியும் பலமுறை பணியாற்றியுள்ளோம்.
நான் விஜய் சேதுபதியை அணுகியபோது அவர் டேட் இல்லை என்று கூறிவிட்டார். நானும் என் அப்பாவும் படத்திற்கு ஒன்றாக இசையமைப்போம் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். இந்தப் படத்தில் என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். படத்தை நான் தயாரிப்பதனால் இது சாத்தியமானது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.