மலையாளத்தில் 'லால் பகதூர் ஷாஸ்திரி', 'வரி குழியிலே கொலபாதகம்', 'இன்னு முதல்' என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்த ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் ரெஜிஷ் மிதிலா கூறுகையில், "எனக்கு தமிழ்ப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் ’எனது’ படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையைக் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார். அதுதான் 'யானை முகத்தான்'.
பேண்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயகரின் தீவிர பக்தர். எங்கே கணபதியை பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார். ஆனால் கொஞ்சம் பிராடு. அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், விநாயகம் என்று சொல்லிக்கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார்.
ஒரு கடவுளை நாம் வேண்டிக்கொள்ளும்போது, நமது கஷ்டங்களை தீர்க்கச்சொல்லி மன்றாடும் போது, அவரே நேரில் வருவார் என நாம் எதிர்பார்க்க மாட்டோம். அப்படி அவர் வந்து விட்டால், நான் தான் கடவுள் என்று அவர் நிரூபிக்க போராட வேண்டியிருக்கும்.
அதேபோல் ரமேஷ் திலக் வாழ்க்கையில் யோகி பாபு வந்ததால் என்ன விநோத நிகழ்வுகள் நடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கிற திருப்பம் என்ன என்பதே இப்படம்.
கதை சொன்னதுமே பிடிச்சுப் போய் தேதிகளை கொடுத்து ரெடியாகிட்டார், யோகி பாபு. அவரே, கருணாகரன், ஊர்வசின்னு கூப்பிட்டு நடிக்கச்சொல்லிட்டார். இதனால் எனக்கு முக்கிய கேரக்டர்களுக்கான பாதி வேலை குறைஞ்சு போச்சு.
ஒரு கேரக்டருக்குள்ளே வந்து உட்காரும்போது அவருக்குன்னு தனி பாணி வந்திடுது. ஒரு தடுமாற்றமும் இல்லை. வாழ்க்கையோட அடிமட்டத்திலிருந்து யோகி பாபு வந்ததால், டக்குனு உணர்வுகளை கொண்டு வந்து விடுகிறார்.
நாட்டில் நடக்கிற அத்துமீறல்களை, மனிதர்களின் குற்றத்தை அழகாக கோபப்படாமல் பேண்டஸியில் கதையாக சொல்லலாம். குழந்தைகள் வரைக்கும் போய் மனசில் நிற்கணும். உணர்வுப்பூர்வமான விஷயங்களையும் வைச்சிருக்கோம். ஒரு காட்சியில் நடிக்கும் போது ஒருத்தர் மட்டுமே டாமினேட் பண்ணனும்னு நினைச்சுட்டால் அவர் மட்டுமே ரீச் ஆவாங்க.
அப்படி இல்லாமல் எல்லோரையும் பின்பற்றி பேசி, யோகி பாபு நடிக்கிறது தான் அழகு. நல்ல பரந்த சினிமா அறிவு இப்ப ரசிகர்கள்கிட்டே வந்திருக்கு. அப்படிப் பட்டவங்களை நம்பித்தான் இந்த யானை முகத்தானை எடுத்திருக்கிறேன்.
என்னுடைய அடுத்த படத்திலும் அவர் தான் ஹீரோ. அதில் இன்னும் யோகி பாபுவை நல்லா பயன்படுத்தணும்னு ஆசையா இருக்கு. வயலண்ட் அட்வென்சர் படம் அது. படம் முழுக்க சிரபுஞ்சி, மேகாலயாவில் தான் நடக்கும். ‘வா கிளம்புவோம்’னு யோகி பாபு சொல்லிக்கிட்டே இருக்கார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அதற்குத் தயாராக வேண்டும்” என்றார்.
'யானை முகத்தான்' திரைப்படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக்குடன் ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ படத்தில் பாட்டியாக நடித்தவர்), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு வெளியாகும் கார்த்தியின் ’சர்தார்’...!