சென்னை: இயக்குநர் ராம் தேவ் கதை, வசனம் எழுதி தயாரித்து, இயக்கி இருக்கும் கிரைம் த்ரில்லர் படமான "மூன்றாம் மனிதன்" திரைப்படம், இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஒட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரணா, ஶ்ரீ நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “இயக்குநர் ராம் தேவ் தயாரிப்பாளர்களை எப்படி பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு ஒரு திறமை வேண்டும். என்னுடைய உதவியாளர்கள் சிலர் நன்றாக வந்து விடுவார்கள் என்று எண்ணுவேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ராம் தேவ், நான்கைந்து தயாரிப்பாளர்களை பிடித்துவிடுகிறார்.
ஒரு டெக்னீஷியன் என்ற முறையில் இந்த படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். சரி என ஒப்புக்கொண்டேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது, அவரும் வேஷம் போட்டுக் கொண்டு வந்து நடிக்க நின்றார். முக்கியமான வேடத்தை எடுத்துக் கொண்டு நடித்தார். இப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தது.
கிரைம் சப்ஜெக்ட் என்றாலும், கிளைமாக்சில் சென்டிமென்ட்டாக முடியும் வகையில் கதையை அமைத்திருக்கிறார். படத்தில் ஏதாவது மெசேஜ் இருக்கா என்று கேட்டால், மெசேஜ் இருக்கிறது. இதில் நடித்திருக்கும் பிரணா, அவரது வயதுக்கு மீறிய பாத்திரத்தை ஏற்று செய்திருக்கிறார். அப்படி செய்வது ஒரு அனுபவம்.
பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்தில் ஶ்ரீ தேவி நடித்தபோது, அவரது வயதுக்கு மீறிய ஒரு பாத்திரத்தில் நடித்தார். இந்த அனுபவம் அவர்களுக்கு பின்னால் உதவியாக இருக்கும். சோனியா அகர்வாலுடன் இரண்டு நாள் இந்த படத்தில் நடித்தேன். அவர் வசனம் பேசும் போது சத்தமே கேட்காது. ஆனால் லிப் மூவ்மென்ட்ஸ் சரியாக இருக்கும்” என்றார்.
பின்னர், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தொடர்ந்து திரையரங்குகள் கிடைப்பதில்லையே என்ற கேள்விக்கு, “நான் இதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் கட்டாயம் ஒரு ஷோ, சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று. தமிழக அரசு இதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான் சிறிய பட்ஜெட் படங்கள் நலம் பெறும். பெரிய படங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், சிறிய பட்ஜெட் படங்களை வந்து பார்ப்பார்கள்” எனக் கூறினார்.
தொடர்ந்து, நடிகை சோனியா அகர்வால் பேசுகையில், “மூன்றாம் மனிதன் படத்தில் நடித்தது நல்ல அனுபவம். இதில் லெஜன்ட் பாக்யராஜுடன் நடித்தது மகிழ்ச்சி. அவருடன் நடித்தபோது நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும். இயக்குநர் ராம் தேவ் மற்றும் படக் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். எல்லோரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
இதையடுத்து, நடிகை பிரணா பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை இயக்குநர் ராம் தேவ் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தபடம் பட்ஜெட் படம் என்பதை விட, நிறைய பேருடைய உழைப்பு இதில் இருக்கிறது. இப்படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். நானே ஒரு புதுமுகம் தான். நிறைய கெட்டப், நிறைய நடிப்பு உள்ளது. முக்கியமாக இந்த சமுதாயத்துக்கு தேவைப்படுகின்ற ஒரு கதை இது. நடைமுறையில் இருக்கிற ஒரு சம்பவத்தை கதையாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: அதிக எதிர்பார்ப்பு.. பெருத்த ஏமாற்றம் அளித்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் 2023!